இனத்தையும், நாட்டையும் நேசிக்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆசன அங்குரார்ப்பண நிகழ்வு, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.
‘இன்று என்மீது சேறுபூசுவதற்காக வெள்ளை வான் என்று விமர்சிக்கின்றனர். உண்மையிலேயே யார் இந்த வெள்ளை வான் கலாசாரத்தை அறிமுகம் செய்தவர்? 89, 90 ஆம் ஆண்டுகள் நினைவிருக்கின்றதா?
அன்று வெள்ளை வானும் இருக்கவில்லை. இருக்கின்ற வான்களில் ஏற்றிச் செல்வார்கள். கடத்திச் சென்று ரயர்களை இட்டுக் கொளுத்தினார்கள். பலருக்கு நினைவில்லை.
அன்று பலரைக் கடத்தி ரயர்களில் தீயிட்டுக் கொளுத்திக் கொன்றார்கள். 150 பேர் என்று சொன்னார்கள்.
இல்லை, 250 என்று பின்னர் கூறினார்கள்.
நான் இவற்றைக் கூறுவதற்குக் காரணம், இன்று பிரேமதாஸவின் யுகத்திற்கு செல்வோம் என்று சிலர் கூறுகிறார்கள்.
இந்த யுகத்திற்கு மீண்டும் சென்றால் வெள்ளை வான் அல்ல, ரயர் எரிப்பு கலாசாரமே நாட்டில் ஏற்படும்.
சிறையிலிருந்த நபர்களை பிணையில் வரவைத்து சுட்டுக் கொன்றார்கள். இதனை மக்கள் மறந்து விட்டார்கள்.
எமது வீடுகளுக்கும் தாக்குதல் நடத்தினார்கள்.
எனவே அப்படியொரு யுகத்திற்கு மீண்டும் இடமளிக்க முடியாது. எனது ஆட்சி மீண்டும் இந்த நாட்டில் உருவாகினால் பிரேமதாஸவின் யுகமே ஏற்படும் என்று யாராவது கூறினால் இப்படியான சம்பவங்களே நினைவில் வரும்.
பிரேமதாஸ சில நல்ல விடயங்களையும் செய்தார். ஆனால் இவ்வாறான செயற்பாடுகளும் இடம்பெற்றன.
எனவே நாட்டின் நிலைமை இப்படியிருக்க, ஒழுக்கமுள்ள, நாட்டைத் திருத்துவதற்கு முடியுமான மற்றும் இனத்தையும், நாட்டையும் நேசிக்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நாம் தெரிவு செய்வோம்.
அவரை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
’19 ஆவது திருத்தச்சட்டத்தை தற்போது பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தில் உள்ளவர்கள்கூட இதற்கான எதிர்ப்புக்களை தற்போது வெளியிடுகின்றனர். நாம் இதனை கொண்டுவரும் போதே எதிர்ப்புத் தெரிவித்தோம்.
19 ஆவது திருத்தச்சட்டம் என்பது முற்றுமுழுதாக எம்மை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட ஒன்றாகத்தான் நாம் கருதுகிறோம்.
இதில், ஒரு ஜனாதிபதி இரண்டு தவனைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, நான் மீண்டும் ஜனாதிபதியாக களமிறங்க முடியாத வகையில்தான் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டன.
பின்னர், வெளிநாடுகளில் குடியுரிமை உள்ளோர் ஜனாதிபதியாக களமிறங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இது பசில் ராஜபக்சவையும் கோட்டாபய ராஜபக்சவையும் இலக்கு வைத்து சேர்த்துக் கொள்ளப்பட்ட திருத்தமாகும்.
பின்னர், நாமல் ராஜபக்ச களமிறங்கிவிடுவார் என்ற நோக்கத்தில், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 32 வயது இருக்க வேண்டும் என்ற எல்லையை 35 வயதாக மாற்றியமைத்தார்கள்.
இதிலிருந்து, எமது குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்காகவே இந்த திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தெளிவாக விளங்குகிறது.
அத்துடன், இதன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரத்தையும் குறைத்து, அவரை சாதாரண ஒரு நபராக காண்பித்துள்ளார்கள்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த சூழ்ச்சிக்கு அனைவரும் ஏமாந்துவிட்டார்கள்’ என குறிப்பிட்டார்;. (சி)