அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்துள்ளார்.

அதிகாரபீடக் கூட்டம் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்கள் பின்வருமாறு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் எட்பட்ட சூழலை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வகித்து வந்த அமைச்சு பதவிகளை சமூக நலன் கருதியும் நாட்டின் ஸ்திரத்தன்மை கருதியும் துறந்தனர்.

ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுப் பிரிவு பல்வேறு விசாரணைகளின் பின்னர் அவரை நிரபராதி என அறிவித்ததுடன் அந்த அறிவிப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராலும் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் தெரிவுக்குழுக்குழு விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லையென தெரிவித்திருந்தனர்.

எனவே பதவி துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை மீளப் பொறுப்பேற்பதற்கு அரசியல் அதிகார பீடம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.

மீண்டும் அமைச்சு பதவிகளை கடந்த சனிக்கிழமை (20) பொறுப்பேற்க வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதும் பிரதமருடன் மேலும் ஒரு தீர்க்கமான சந்திப்பை மேற்கொண்ட பின்னர் பொறுபேற்பதென முன்னாள் அமைச்சர் பெளசி தலைமையில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் முடிவு செய்திருந்தனர்.

இந்த விடயம் ஜனாதிபதிக்கும் நேரடியாக எடுத்துச் சொல்லப்பட்டு இன்று (29) திங்கட்கிழமை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தமையையும் கருத்திற்கொண்டு அரசியல் அதிகார பீடம் இந்த முடிவை மேற்கொண்டது . என்று கட்சியின் செயலாளர் சுபைதீன் தெரிவித்தார்.(சே)

Previous article“மதுபோதையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்வோம்”-விழிப்புணர்வு செயலமர்வு
Next articleகாணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!