வவுனியா மாவட்டத்திலுள்ள, காணிகள் தொடர்பான பல்வேறுபட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான செயலமர்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தலைமையில், இன்று நடைபெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செயலமர்வில், வட மாகாண காணி ஆணையாளர் பொ.குகநாதன் கலந்துகொண்டார்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து, வவுனியாவில் குடியேறி நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு, சட்ட ரீதியாக அவர்கள் வசித்து வரும் காணிகளை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
வவுனியாவில், காணிகள் தொடர்பாக பொது மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகள், நீண்ட காலம் வெளிநாடுகளில் வசித்து வருபவர்களின் காணிகள் பராமரிக்கப்படாமல் இருப்பதினால் ஏற்படும் பிரச்சனைகள், மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள நெல் வயல் தொடர்பான பிரச்சினைகள், புகையிரத வீதிகளுக்கு அருகாமையில் குடியிருக்கும் மக்களுக்கு புகையிரதத் திணைக்களத்தின் அனுமதியுடன் குத்தகை அடிப்படையில் காணிகளை கையளிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில், குளங்களின் நீரேந்து பகுதிகள், மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு நீண்ட காலமாக வசித்து வரும் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கல், வன வளத்துறையினர் வடக்கில் மக்களின் பூர்வீகக் கிராமங்களை ஆக்கிரமித்துள்ளமை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
வவுனியா நகரம், வேப்பங்குளம், வேளார் சின்னக்குளம், நெடுங்கேணி, அருவித்தோட்டம், சிறிநகர், குருக்கள் புதுக்குளம், தாண்டவர் புளியங்குளம் ஆகிய பிரதேசங்களின் காணிப் பிரச்சனைகளும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வில், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சட்ட உதவி ஆணைக்குழுவின் திட்ட ஆலோசகர் பத்மநாதன், நில அளவைத் திணைக்களம், வனவளத்துறை, புகையிரத திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (சி)