பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்டமாக அமெரிக்க குடியுரிமையை நீக்கும் பணிகளை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை நீங்கியதற்கான ஆவணங்களை பெரும்பாலும் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கோட்டாபய பகிரங்கமாக வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபயவின் குடியுரிமை நீக்கத்திற்கு அனுமதியை வழங்கியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், அவரது அமெரிக்க கடவுச் சீட்டை இரத்துச் செய்யும் நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளது.

கடவுச் சீட்டை இரத்துச் செய்து நிர்மூலமும் செய்துவிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த மாதம் சிங்கப்பூருக்கு சென்ற கோட்டாபய இலங்கை கடவுச்சீட்டுடன் சென்றிருந்தார்.

அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பாக மே மாதம் வெளிவந்த பட்டியலில் கோட்டாபயவின் பெயர் இல்லையென சில செய்திகள் முன்னதாக வெளிவந்திருந்தன. ஆனால் அது காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் பட்டியல் என்பதால் அடுத்த பட்டியலில் அவரின் பெயர் இருக்குமென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (நி)

 

Previous articleகுளியாபிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!
Next articleஅம்பாறையில் வெளிவாரி பட்டதாரிகள் பாதிப்பு!(படங்கள் இணைப்பு)