பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி, நுவரெலியா ஹட்டனில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம், இன்று பிற்பகல் 3.00 மணியளவில், ஹட்டன் நகரில், மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள், பொது மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்திற்கு அமைவாக, 50 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் இணங்கியுதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.

ஆனால், இந்த விடயத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தடையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவண்ணம், சுமார் ஒரு மணித்தியாலயம் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தினால், சிறிது நேரம் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து, மல்லியப்பு சந்தி வரை சென்று, மல்லியப்பு சந்தியில் வைத்து, அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுடைய உருவப் பொம்மைக்கு தீ வைத்து கொளுத்தியமை குறிப்பிடத்தக்கது. (சி)

Previous articleநாட்டில் உச்சக்கட்ட பாதுகாப்பு : பிரதமர்
Next articleபிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்!