ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் செய்யவில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணை தொடர்பில், கடுமையாக அதிருப்தியை வெளியிட்டிருந்த கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வன்மையாக கடிந்து கொண்டிருந்த நிலையில், சுதந்திரக் கட்சி பதிலடி வழங்கியுள்ளது.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர….

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர், பாதுகாப்பு அமைச்சராகவும் நாட்டின் தலைவராகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாரிய வேலைகளை முன்னெடுத்திருந்தார். 4, 5 நாட்களில் அனைவரையும் கைது செய்தார்கள்.

முப்படையினர், பொலிஸார் ஊடாக சோதனைகள் நடத்தப்பட்டு, அதனுடன் தொடர்புடைய நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  அன்றைய தாக்குதலுக்குப் பின்னர், இதுவரை எந்தவித தாக்குதல்களும் நடத்தப்படவில்லை.

3 மாதங்கள் ஆகின்ற நிலையில், குண்டு வெடிப்புக்களோ அல்லது வேறு அவம்பாவிதங்களோ பதிவாகவில்லை.
அதேபோல பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. விசேடமாக, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகளும் வழக்குகளும் இடம்பெறுகின்றன.

கொச்சிக்கடை தேவாலயத் தாக்குதலுக்கு அடுத்த நாளில், கடற்படைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டு, தேவாலயத்தின் திருத்தப் பணிகளை ஆரம்பிக்கச் செய்தார்.

அதேபோல நீர்கொழும்பு தேவாலயத்தின் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, இராணுவத்திற்கு ஜனாதிபதி பணித்தார்.

ஆனால் இந்த இரண்டு ஆலயங்களையும் ஜனாதிபதி சென்று திறந்து வைத்து புள்ளிகளைப் பெறவில்லை.
அதிகாரத்தை வைத்து அவர் எப்போதும் அரசியல் செய்யவும் இல்லை.

இன்னும் ஏதாவது இதுபற்றி பிரச்சினைகள் சந்தேகங்கள் இருந்தால், ஜனாதிபதியை நேரில் சந்தித்துதான் பேசியிருக்க வேண்டும்.

கர்தினால் மீதும் எமக்கு மிகப்பெரிய கௌரவம் இருக்கிறது. எனினும் சில விடயங்கள் குறித்து அவருக்கு குறைகள் இருக்கலாம். அதனை தெருக்களில் கூறாமல், நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து அவருக்கு பேசலாம்’
என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Previous articleபோரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தின் புதிய பிரதமர்
Next articleபுதிய வாக்காளர்களுக்கு பயப்படும் அரசு!