யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தச் சென்ற ஆவா குழு மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ரூவான் குணசேகர தெரிவித்தார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில், மானிப்பாய்-இனுவில் பிரதான வீதியில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவில், ஆவாக் குழு நேற்றிரவு தாக்குதல் ஒன்றினை நடாத்தவுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொலிஸார் உசார்படுத்தப்பட்டு, ஆவாக் குழுவை மடக்கும் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, மானிப்பாய் இனுவில் பிரதான வீதியூடாக, வாள்களுடன் சிலர் மோட்டார் சைக்கிளில் பயனிப்பதை அவதானித்த பொலிஸார், அவர்களை வழிமறித்து கைது செய்ய முயன்றுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி மோட்டார் சைக்கிளில் சிலர் தப்பித்துச் செல்ல முற்றபட்டனர்.
தப்பித்துச் செல்ல முற்பட்டவர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில், சம்பவ இடத்திலேயே இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், உயிரிழந்த இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பிறிதொரு நபரும் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்களில் நால்வர் தப்பித்துச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்யும் வகையில் தேடுதல் நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த கும்பல் கைவிட்டுச் சென்ற கஜேந்திரா வாள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தையடுத்து, ஏனைய பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த உயிரிழந்த இளைஞனின் உறவினர்சடலத்தை அடையாளம் காட்டினார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த 23 வயதுடைய செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)






