நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காணாமல்போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது, மாணவிகள் இருவரும் காணாமல் போயிருந்தனர். இந்த நிலையில் ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுடைய மதியழகன் லக்ஷமி எனும் மாணவி உயிரிழந்துள்ளதோடு, 12 வயதுடைய மதியழகன் சங்கிதா மாணவியை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளநிலையில், மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நி)









