அம்பாறை மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன்; ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம், இன்று ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் பக்திபூர்வமாக நடைபெற்றது.

உகந்தை அருள் மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவானது, கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 17 ஆம் திகதி வரை இடம்பெற்ற திருவிழாக்களுடனும், இன்று இடம்பெற்ற சமுத்திர தீர்த்தோற்சவம் மாலை இடம்பெற்ற கொடியிறக்கம் நாளை இடம்பெறும் பூங்காவனத் திருவிழாவுடனும், வைரவர் பூஜையுடனும் நிறைவுறவுள்ளது.
இன்று காலை மூலமூர்த்தவரான வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்த முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வகையில் உள்வீதி உலா வந்தார்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான இந்து பௌத்த அடியார்கள் புடைசூழ, பக்தர்களின் அரோகரா வேண்டுதலுடன் மங்கள வாத்தியம் முழங்க வெளிவீதி உலா வந்ததுடன் தீர்த்தோற்சவத்திற்காக வங்கக்கடல் நோக்கி பக்தர்களினால் சுமந்து செல்லப்பட்டார்.
கடற்கரையில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் அமர்த்தப்பட்ட முருகப் பெருமானுக்கு அபிசேகம் நடைபெற்றதுடன் பக்தர்களுடன் தீர்த்தமும் ஆடினார்.
ஆலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற தீர்த்தோற்சவ பெருவிழாவில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டதுடன், கிரியைகள் யாவற்றையும் கிரியா கிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகம பானு சிவஸ்ரீ க.குசீதாராம் குருக்கள் மற்றும் ஆலய குரு தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.
இதேவேளை ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு பல்வேறு சமூக அமைப்புக்கள் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. (சி)















