மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்ட ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் அளித்து வந்தது. அதன்பின்னர் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய அமைப்புகள் தொடர்பான வழக்குகளை பாகிஸ்தான் அரசு தீவிர விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், ஹபீஸ் சயீத், லாகூரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லாகூரில் இருந்து குர்ஜன்வாலாவுக்கு புறப்பட்டுச் சென்றபோது சயீத்தை கைது செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவனிடம் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு இம்ரான் கான் அரசுக்கு கடும் நெருக்கடி அளித்தது குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleஅரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சி-நாமல்
Next articleஇன்சமாம் பதவி விலகினார்