நுவரெலியா மாவட்ட மருத்துவமனையின் குறைபாடுகள் தீர்க்கப்படாத நிலையில், திறப்பு விழா நிகழ்வு தேவையற்ற விடயம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நுவரெலியா கிளையின் உறுப்பினர் வைத்தியர் சமத் லியனகே தெரிவித்துள்ளார்.

இன்று நுவரெலியாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நுவரெலியா வைத்தியசாலை இன்று இடம்பெற்ற நிகழ்வின் மூலம், வெளிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு போன்ற பிரிவுகள் செயலிழந்துள்ளன.

இந்த பிரிவுகள் அனைத்தையும் பழைய வைத்தியசாலை கட்டிடத்திலேயே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் நோயாளர்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.

அரசியலுக்காக நோயளர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது உகந்தது அல்ல, இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கிறது.

இன்று இடம்பெற்ற நிகழ்விற்கு செலவிடப்பட்ட பணத்தின் மூலம், பாரிய வேலைகள் பலவற்றை செய்திருக்கலாம்.
ஆனால் இங்கு பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்திலேயே குறைந்த அளவிலான வைத்தியர்கள் இருக்கின்றனர், அதேபோன்று தாதியர் பற்றாக்குறையும், வைத்திய ஊழியர்களின் குறைபாடும் நிலவுகின்றது.

ஆனால் கருத்திற் கொள்ளாமல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு வைத்தியசாலைகளை திறந்து சொற்ப மகிழ்ச்சியடைகின்றார்.

இதன் மூலம் நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, எனவே அநாவசியமான முறையில் நோயாளர்களை பலிகடாவாக்கி பணத்தை வீண்விரயம் செய்வதினை நாம் கண்டிக்கின்றோம்.

இதனூடாக வைத்தியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர், இதனை செய்ய வேண்டாம் என கடிதம் மூலம் பல்வேறு தடவைகள் நாம் உரிய தரப்பினருக்கு அறிவித்தோம்.

ஆனால் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று நடைபெற்ற இந்த நிகழ்வை அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாம் புறக்கணித்தோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleயாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்
Next articleரஞ்சனிடம் விளக்கம் கோரிய ரணில்