ஜனநாயகத்தை மீறிய ஜனாதிபதியை நியாயப்படுத்தி ஐக்கிய தேசியக்கட்சியை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவமதிக்கின்றாரென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனநாயகவாதியென கூறி அவரை ஆதரிக்கும் நடவடிக்கைகளையே சஜித் தற்போது மேற்கொண்டு வருகின்றார்.
இது ஐ.தே.க.வை இழிவுப்படுத்தும் செயற்பாடாகும். மேலும் அரசியல் அமைப்பை மீறி ஜனாதிபதி செயற்பட்டாரென நீதிமன்றமே கூறியுள்ளது. இந்நிலையில் அவர் எவ்வாறு ஜனநாயகவாதியாக ஏற்றுக்கொள்ளப்படுவார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி, அனைத்து உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தையொன்றை நடத்திய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானிக்கும்.
அந்தவகையில் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமக்கு விருப்பமுள்ளது.
மேலும் முஸ்லிம்- தமிழ் மக்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்படுகின்ற தவறான கருத்துக்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.(சே)








