மரண தண்டனையை நீக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தால், அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கும், நாட்டை ஒப்படைப்பதாக அமையும் என்றும், அப்படி ஏற்பட்டால் அந்த தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாகவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று, மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மரண தண்டனையை நீக்குவதற்கு, அரசாங்கத்தின் சிலரினது தேவையின் பேரில், பாராளுமன்றத்தில் சட்டமொன்றை கொண்டு வருவதற்கு முயற்சிப்பதன் மூலம் வெற்றியடைவது, நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளுமேயாகும்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும், இந்த நாட்டின் இளம் தலைமுறையினரது எதிர்காலத்தை சீரழிப்பதற்கு நான் இடமளிக்க போவதில்லை.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக, முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், மரண தண்டனை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
மரண தண்டனை வழங்குவது பற்றிய தீர்மானத்திற்கு, சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது, சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே.
எனவே மரண தண்டனை நாட்டுக்கு அவசியமாகும் என்பதை, நாட்டையும் இளந் தலைமுறையினரையும் நேசிக்கின்றவர்கள் மத்தியில், விரிவான மக்கள் ஆதரவை கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த நோக்கத்திற்காக ஒன்றிணையுமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன், என குறிப்பிட்டார். (சி)








