போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.
சுமார் ஒரு மில்லியன் போரா சமூகத்தின் உறுப்பினர்கள், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், தான் மிகவும் நேசிக்கின்ற இலங்கைக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன், எதிர்காலத்திலும், தமது சீடர்களுடன் இந்நாட்டுக்கு வருகை தர எதிர்பார்த்திருப்பதாக, போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும், கொரோனா தொற்று ஒழிப்புக்கான நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த ஆன்மீகத் தலைவர், இலங்கையின் வளர்ச்சியைத் தான் எதிர்ப்பார்த்திருப்பதாக குறிப்பிட்டார்.
கொரோனா – செய்கடமை அறக்கட்டளைக்கு, போரா சமூகத்தின் தலைவர் செய்ஃபுத்தீன் சஹெப் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு போரா சமூகத்தினர் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் போரா சமூகத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்!






