பாகிஸ்தானின் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சென்றுள்ளார்.
இதன்போது, பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக சஜித் பிரேமதாசவினால் தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பிள்ளையின் கல்விக்காக மடிக்கணினி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மறைந்த பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து கண்காணித்து வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நியாயமான விசாரணையின் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள தேவையான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் சகோதரத்துவம் பிரியந்த குமார தியவதனவின் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரியந்தவின் படுகொலைக்கு காரணமானவர்களைக் கைது செய்வதற்கு அந்நாட்டுப் பிரதமரின் நேரடியான உடனடித் தலையீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியை தெரிவிப்பதாகவும், பிரியந்த குமார மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவரைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் பாராட்டுக்குரியவர் எனவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து மதங்களும் மனிதாபிமானம், நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல் மற்றும் அன்பையே போதிக்கின்றன எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,சில தரப்புகள் அதை தவறாக புரிந்து கொண்டு செய்யும் அடாவடித்தனங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு சிஜித் நிதியுதவி!
