மெக்சிக்கோவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அதிகளவில் அடைத்து ஏற்றிச் சென்ற மூடிய சரக்கு லொறி ஒன்று கவிழ்ந்து பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 49 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு மெக்சிகோவில் நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
முதல்கட்ட தரவுகளின்படி 49 குடியேற்றவாசிகள் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நெடுஞ்சாலை நடைபாதை மற்றும் சரக்கு லொறி உள்ளே கிடப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காண முடிகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகள் எனத் தோன்றுவதாக, மெக்சிக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் சிலர் தாங்கள் கௌதமாலாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக, மெக்சிக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனவும், அதிகளவு எடையால் சரக்கு லொறி கவிழ்ந்து சாலை அருகே இருந்த இரும்புப் பாலத்துடன் மோதியிருக்கலாம் எனவும் சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான லொறியில் குறைந்தது 107 குடியேற்றவாசிகள் இருந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வித்தில் சிக்கிய சரக்கு லொறியில் கணக்கிடப்பட்டதை விட அதிகளவு புலம்பெயர்ந்தவர்கள் இருந்திருக்கலாம். குடிவரவு அதிகாரிகளால் தாங்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர்கள் தப்பியோடியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கௌதமாலாவின் எல்லை அருகே உள்ள மெக்சிக்கோ பகுதியில் வைத்து புலம்பெயர்ந்தவர்கள் இந்தக் கொள்கலன் லொறியில் ஏற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மெக்ஸிகோவில் மூடிய சரக்கு லொறிகளில் புலம்பெயர்ந்தவர்களை ஆபத்தான வகையில் இராகசியமாக ஏற்றிக் கடத்தும் நடவடிக்கை அடிக்கடி இடம்பெறுகிறது.
ஆட்கடத்தல்காரர்களால் குடியேற்றவாசிகள் மறைத்துக் கடத்தி செல்லப்படும் சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையை மெக்சிக்கோ அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். எனினும் ஆட்கடத்தில் சம்பவங்கள் மிக இரகசியமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சரக்கு லொறி விபத்தில் 49 பேர் உயிரிழப்பு: 58 பேர் காயம்!
