முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இன்று அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி, ச.தம்பிராசா என்பரின் காணிக்குள், வீட்டிற்கு அருகில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், கடந்த 27 ஆம் திகதி முதல் பொலிசாரினால் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று நிலத்தை அகழ்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை, இதே பகுதியில் தங்கத்தை தேடி சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் அடங்கிய குழுவினரை, பொலிஸார் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், படை அதிகாரிகள், பொலிசார் முன்னிலையில், இன்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில், அதிகாரிகள் குழியை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். (சி)

Previous articleஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பு
Next articleபாகிஸ்தானில் ரயில்கள் விபத்து : 11 பேர் உயிரிழப்பு