மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மிக மோசமான நிலையில் உள்ள வீதிகளினை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு திருச்செந்தூர் தோமஸ் அன்டனி வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறித்த வீதி கடந்த காலத்தில் மிகமோசமான நிலையில் இருந்தபோது அது தொடர்பில் பல்வேறு தடவைகள் புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும் குறித்த வீதி புனரமைக்கப்படாத நிலையில் மிகவும் கஸ்டங்களை அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வந்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் 12 ஆம் வட்டார உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமார் மேற்கொண்ட முயற்சியின் பயனாக குறித்த வீதியை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதற்கென மட்டக்களப்பு மாநகர சபையினால் 20 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாநகர சபையின் ஆளணி மற்றும் இயந்திரங்களின் உதவிகளுடன் இந்த வீதியினை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புனரமைப்பு பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மிகமோசமான நிலையில் இருக்கும் இந்த வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல வீதிகளை புனரமைக்கும் பணிகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். (சி)

Previous articleஉணவு ஒவ்வாமை : 38 மாணவர்கள் வைத்தியசாலையில்
Next articleஅனுமதி இல்லா ஆயுர்வேத வைத்தியசாலை : வைத்தியர் கைது