கட்டார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடுத்த அந்தப் போர், தொடர்ந்து 19-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

இதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கியது. கட்டார் நாட்டின் டோஹா நகரில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் கடந்த மாதம் (ஜூன்) 29ம் திகதி ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. 6 நாட்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு பெற்றவர்களின் குழு 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. டோஹா சொகுசு ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 70 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சமரசத்தை ஏற்படுத்தவும், வன்முறையை குறைத்துக்கொள்ளவும் இரு தரப்பும் உறுதி எடுத்துக்கொண்டன.

இதையொட்டி கட்டார் பயங்கரவாத தடுப்பு சிறப்பு தூதர் முத்லாக் அல் கஹ்தானி கூறும்போது, “இரு தரப்பினரிடையேயான வேறுபாடுகள் குறைந்துவிட்டன. மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ளன” என குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.(சே)

Previous articleஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத்தை அழித்தது சவுதி
Next articleகண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டம்!