மன்னார் மடுத்திருத்தலத்தில், மலசலகூட தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா தலைமையில் இன்று நடைபெற்றது.

மன்னார் மடுத்திருத்தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு, மடுத்திருத்தலத்தில் அமைக்கப்படவுள்ள 252 மலசலகூட தொகுதிகளுக்கான அடிக்கல், இன்று வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக, மலசலகூட தொகுதிகளுக்கான அடிக்கல்லை, தேசிய கொள்கை, பொருளாதார, மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா நாட்டி வைத்தார்.

மன்னார் மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மடு பிரதேச செயலாளர் வி.ஜெயகரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.சிறிபாஸ்கரன், மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொகான் குரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர். நிகழ்வில், மடு பிரதேச செயலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வைத்தொடர்ந்து, பருப்புக்கடந்தான் வீதியூடாக மடு திருத்தலத்திற்குச் செல்லும் பிரதான வீதியை, இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா நேரடியாக சென்று பார்வையிட்டார்.

குறித்த வீதி, நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாகவும், அதனால் குறித்த வீதியூடாக பயணிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா வின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், வீதியை துரித கதியில் புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (சி)

Previous articleவற்றிய ஆற்றிலிருந்து வெளிவந்த கோயில்
Next articleமக்களை பயம் காட்ட அமெரிக்காவை பயன்படுத்துகிறார்கள் : துஸார இந்துனில்