ஜனாதிபதி என்ற வகையில், மக்களின் வறுமையை போக்குவதற்கும், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை இன்று (05) முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
‘மைத்ரி ஆட்சி – நிலையான யுகம்’ எழுச்சிபெறும் பொலன்னறுவை 2016 – 2020 ஜனாதிபதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்காக மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளில் புதிய கட்டிடங்கள் மற்றும் அபிவிருத்தி வசதிகளை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
நாட்டு மக்கள் கல்வியறிவுடையவர்களாக இருந்தால் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நவீன தொழிநுட்பத்துடன், முன்னோக்கிச் செல்கின்றபோது பிள்ளைகளை நாட்டை நேசிக்கும் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை இன்று (05) முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
பொலன்னறுவை, கவுடுல்ல மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனைப் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து கல்அமுன மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 06 வகுப்பறைகளைக்கொண்ட இரண்டு மாடி கட்டிடத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
அதன்பின்னர் மீகஸ்வௌ கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.
கல்லூரியின் பல்வேறு குறைபாடுகள் பற்றி ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதுடன். அவற்றிற்கு தேவையான நிதியினை விரைவில் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதேநேரம் பொலன்னறுவை அம்பகஸ்வௌ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர்கூடத்துடன் கூடிய புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.
மாணவர்களின் கோரிக்கையின் பேரில் அப்பாடசாலையின் ஏனைய குறைபாடுகளையும் நிவர்த்திப்பதற்காக 50 இலட்ச ரூபா வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார்.
மேலும் இப்பாடசாலைக்கு புதிய கணனித் தொகுதியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கிராம பிள்ளைகளுக்கு உயர்ந்த இடங்களுக்குச் செல்வதற்கான வழி கல்வியாகும் என்றும் கிராமிய பாடசாலைகளுக்கு அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுப்பது அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியின் சரியான வழியை அமைத்துக் கொடுப்பதற்காகவேயாகும் என்றும் குறிப்பிட்டார்.
வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பிரதேசத்தின் மக்கள் பிரதிநிநிதிகள், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.






