போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவது தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இதன் போது, போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க, விமான சேவைகள் அதிகார சபை தலைவர் சஞ்சீவ விஜேரத்ன உட்பட, விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரிகளும், மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், விமான நிலைய ஓடுபாதைகள், விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
இந்த கள விஜயத்தை தொடர்ந்து, அமைச்சர்கள் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் அரச நிகழ்வு, இன்று காலை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கு கிழக்கில் மட்டுமல்ல, தெற்குப் பகுதியிலும் பாரியளவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கான ஆரம்ப பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக வந்திருக்கின்றேன்.
ஓகஸ்ட் மாதம் அதன் பணிகளை நிறைவு செய்து சர்வதேச விமான நிலையமாக செயற்பட வைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளேன்.
செப்டம்பர் மாதமளவில் இந்தியாவின் விமானங்களை தரை இறக்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன்.
அதேபோன்று மட்டக்களப்பு விமான நிலையத்தினையும் நவீனமயப்படுத்துவதற்கு எண்ணியிருக்கின்றோம்.
இங்கே 70 ஆசனங்களை கொண்ட விமானங்களை தரையிறக்குவதற்கும் எதிர்பார்த்திருக்கின்றோம்.
இன்னும் கொஞ்சம் முயற்சி மேற்கொண்டு அபிவிருத்தி செய்து பெரிய விமானங்களை இங்கே கொண்டுவருவதற்கும் எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.
முப்பது வருடங்களாக இங்கே அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்தன.
நாம் 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர், வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்குப் பகுதியிலும் பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த இரண்டு வருடங்களில் நாம் செய்த அபிவிருத்தியை நீங்கள் பார்த்தீர்களே ஆனால், 10 வருடங்கள் செய்ய வேண்டிய அபவிருத்திப் பணிகளை நிறைவு செய்திருக்கின்றோம்.
எங்களில் இருக்கின்ற பெரிய குறைபாடு மற்றைய அரசாங்கங்களைப் போன்று நாம் ஊடகப் பிரசாரங்களை செய்வது கிடையாது.
அபிவிருத்திப் பணிகளில் நாம் யோசித்து இருக்கின்றோம்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிறுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வேலைவாய்ப்புக்களை வழங்கி இளைஞர்களை தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம்.
மீண்டும் ஒரு யுத்தத்தினை இங்கே ஏற்படுத்துவதற்கு எமக்கு விருப்பம் இல்லை.
வடக்கு கிழக்கில் வாழ்கின்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, வடக்கு, தெற்கு, கிழக்கு அனைத்துப் பகுதிகளுக்கும் அபிவிருத்தியை முன்னெடுக்க இருக்கின்றோம்.
விமான போக்குவரத்துப் போன்று புதிய புகையிரதங்களை ஓடவிட்டிருக்;கின்றோம்.
புதிய 2 ஆயிரம் நவீன பஸ்களை இறக்குமதி செய்திருக்கின்றோம்.
கொழும்பில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிற்கும் அந்த பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தினை பொறுத்தவரையில் ஒருவருடைய தனிப்பட்ட பிரச்சினைக்காக மக்கள் பாதிக்கப்படக்கூடாது.அது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தி தீர்வினை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம், அவர்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றார்கள்.
மக்களை பாதிக்கும் வகையில் எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளோம்.
அவ்வாறு நடக்குமானால் கடுமையான நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துள்ளோம். எமது பேச்சுவார்த்தை வெற்றியளித்தது, நேற்று மாலை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன. என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மட்;டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான நிலையமாக மாறவுள்ளதாக, போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகளவான இலாபத்தினை நாம் கடந்த வருடங்களில் பெற்றிருக்கின்றோம்.தற்போது புதிய பஸ்களை இறக்குமதி செய்திருக்கின்றோம், ஊதியத்தினை அதிகரித்துள்ளோம், புதிய புகையிரதங்களை நாட்டிற்கு கொண்டுவந்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
மேலும் 12 ரயின் எஞ்சின்களை இறக்குமதி செய்யவுள்ளோம், 160 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யவுள்ளோம், மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமான நிலையமாக மாறவுள்ளது.
இது படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது, தற்போது பலாலி விமான நிலையத்தினையும் தரமயர்த்துவதற்கான தொடக்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஓகஸ்ட் முதல் வாரத்தில் இந்த பணிகள் நிறைவடைந்து விடும்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளன. பண்டாரநாயக்க விமான நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. எமது அமைச்சு பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.(சி)






