வட மாகாண விவசாய திணைக்கள பிரச்சினை தொடர்பில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற, வட மாகாண விவசாய திணைக்கள கணக்காய்வு கூட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் பணித்திருந்ததுடன், அந்த அறிக்கை தற்போது ஆளுநருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள, ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த சம்பவத்தில், சிறுபான்மை இன பெண் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதனை வன்மையாக கண்டிதுள்ள ஆளுநர், இவ்வாறான சம்பவங்கள் இனி வட மாகாணத்தில் இடம்பெறாத வகையில், முன்னெடுக்க கூடியதான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, போராட்டங்கள் ஊர்வலங்களை மேற்கொண்டு, தன்மீது எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும், பொது மக்களுக்கு சேவையை வழங்க வேண்டிய அலுவலக நேரத்தில், அரச உத்தியோகர்கள், ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அலுவலக நேரத்தில் முறையான விதிமுறைகளை கடைப்பிடிக்காது, ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் ஈடுபடும், வட மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும், வடக்க மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். (சி)





