இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம், புகையிரத நிலைய வீதியிலுள்ள, பிரதான இலங்கை வங்கியில் இருந்து ஆரம்பமாகி, மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக, கண்டி வீதி வழியாக கார்கில்பூட் சிட்டிக்கு முன்பாக சென்று, கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இன்று மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இடம்பெற்ற போராட்டத்தில், ஊழியர் உணவிற்கு தேனீருக்கு வரி வேண்டாம், இல்லாமல் ஆக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீள வழங்கு, வங்கி ஊழியர்களின் உரிமையை உறுதி செய், ஓய்வூதிய கொடுப்பனவு வழுக்களைத் திருத்துக, பெற்றுக்கொள்ளத் தக்க ஒரு ஓய்வூதியத்தை தருக போன்ற, தமிழ், சிங்கள வசனங்களைத் தாங்கிய பதாதைகளுடன், போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, அரசாங்கம் விதித்துள்ள வரி விதிப்பை நீக்குமாறு கோரி, மட்டக்களப்பிலும், அரச வங்கி ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
அகில இலங்கை இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரையில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட வங்கி ஊழியர்கள், காந்தி பூங்காவில் இருந்து பேரணி ஆரம்பித்து, மணிக்கூட்டு கோபுரம் வரையில் சென்று, பின்னர் அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
வங்கி ஊழியர்கள் பெறும் கடன்களுக்கு, அரசாங்கத்தினால் மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளதை நீக்குமாறும், ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்க்குமாறும், அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தனர். (சி)





