நுவரெலியா டிக்கோயா வைத்தியசாலையின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி செயலிழந்துள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டட தொகுதியின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக செயலிழந்து காணப்படுவதனால் பிரதேசத்தில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக நாளாந்தம் மஸ்கெலியா, பொகவந்தலா, நோர்வூட் கொட்டகலை, ஹட்டன், நல்லதண்ணி, லக்ஸபான, நோட்டன்பிரிஜ், வட்டவளை உள்ளிட்ட தோட்டங்களை அண்டிய சுமார் ஆயிரக்கணக்காக மக்கள் வருகைதருகின்றனர்.
எனினும், குறித்த மலசல கூட பகுதியிலிருந்து அதிகாலையிலும் இரவு வேளையிலும் தூர்நாற்றம் வீசுவதனால் நோயாளர்களும் பிரதேச மக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அத்தோடு,இந்த வைத்தியசாலைக்கு வரும் கர்பினித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் துர்நாற்றம் காரணமாக மயக்கமடைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையிலிருந்து நேரடியாக சுத்திகரிக்கப்படாத மலசல கூட கழிவு நீர் காசல் ரி நீர்த்தேக்கத்தில் கலப்பதனால் இந்த நீரினை குழிப்பதற்காகவும் குடிப்பதற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனடிப்படையில், விரைவில் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி மறுசீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வு காணப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)







