முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், குற்றப் புலனாய்வுத்துறையினர் வைத்தியசாலையில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை, இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், சுகயீனம் காரணமாக, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக, குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவை, நாளை வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும், நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார். (சி)

Previous articleதிருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமைக்கு சாகாம குளத்தின் நீர் முகாமைத்துவம் இல்லாமயே காரணம்
Next articleபோதைப்பொருள் விற்று போராட்டம் நடத்தியவர் அல்ல பிரபாகரன் : கோடீஸ்வரன்