சுதந்திரமும் சமாதானமுமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே மொழியறிவு மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரசகரும மொழிகள் தின விழாவில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நல்லிணக்கத்தை நனவாக்குவதற்கு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறை ரீதியில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ‘அரசகரும மொழி கொள்கை தொடர்பில், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் இதுவரையிலும் போதிய கவனம் செலுத்தவில்லை.
தனது தாய்மொழிக்கு மரியாதையளிப்பதைப் போன்றே ஏனைய மொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.
நாட்டு மக்களிடையே அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் தோன்றியுள்ளமைக்கு அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையே காரணமாகும்.
அனைத்து மக்களும் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான சுதந்திரமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மொழியறிவை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். (நி)






