பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்
செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தலைமையிலான அரசாங்கம் தனது ஆட்சிக் காலப்பகுதியில் எழுந்த மத முரண்பாடுகளைத் தடுக்க தவறிவிட்டது.
இந்த பிரச்சினைகளை தடுக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும், முன்னாள் ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் முன்னாள் ஜனாதிபதி அந்த காலக்கட்டத்தில் அவற்றினை தடுப்பதற்கான முயற்சிகளை செய்யவில்லை என்றும் தெரிவித்த ரிஷாட் பதியுதீன் இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடிவு செய்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
எனினும் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களுக்கும் இன மத வேறுபாடின்றி பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பது அல்லது நாட்டை ஸ்திரமற்றநிலைக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும் எந்தவொரு முயற்சிகளையும் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.








