அமெரிக்காவுக்கும், தங்களுக்கும் கத்தாரில் தொடங்கியுள்ள 7-ஆவது கட்ட பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சுவார்ததை ஆரம்பமாகியுள்ளது.

“அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையேயான 7-வது சுற்று சமரச பேச்சுவார்த்தையில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர், கட்டார் தலைநகர் தோஹாவில் தொடங்கியுள்ள 7-ஆவது கட்ட ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து 20,000 அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் விலகுவதற்கு வழிவகை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த இரு தரப்பினரும் முயன்று வருவதாகவும், அதற்காக, நடைமுறைக்கு உகந்த முடிவுகளை எட்டுவதற்கான முயற்சிகள் இந்த பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி வரலாறு காணாத தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த அந்த தாக்குதல்களை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை அகற்றியது.
ஆனால் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. 18 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் ஈடுபட்டும் பலன் இல்லை.

இந்த நிலையில்தான் சமரச பேச்சு பற்றிய கேள்வி எழுந்தது. ஆப்கானிஸ்தான் அரசு நேரடி பேச்சுவார்த்தைக்கு தலீபான் பயங்கரவாதிகளை அழைத்தது. ஆனால் அவர்களோ அமெரிக்காவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என திட்டவட்டமாக கூறினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக விலக்கிகொள்ளும் வரையில் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் எனவும் அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கியது.
6வது சுற்று பேச்சுவார்த்தை முடிந்தும் திருப்பம் ஏதும் நிகழவில்லை.
இந்த நிலையில் 7-வது சுற்று பேச்சுவார்த்தை கட்டார் நாட்டின் தலைநகரான டோஹாவில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

செப்டம்பர் முதலாம் திகதிக்குள் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும், அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விட முடியும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நம்பிக்கை வெளியிட்டுள்ள சூழலில், பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் வரை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.(மா)

Previous articleஉலகக் கிண்ணப் போட்டி:இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!
Next articleதந்தை செல்வா கலையரங்கம் யாழ்ப்பாணத்தில் திறப்பு