அமெரிக்கா மெக்சிக்கோ எல்லையில், எல்சல்வடோரை சேர்ந்த தந்தையும் 2 வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என, குடியேற்றவாசிகள் தொடர்பான அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மெக்சிக்கோ அமெரிக்க எல்லையில் உள்ள ரியோ கிரன்டே ஆற்றுப்பகுதியில், ஒஸ்கார் அல்பேர்ட்டோ மார்டினஸ் ரமிரெஸ் தனது இரண்டு வயது மகளான வலெரியாவுடன் உயிரிழந்திருப்பதை காண்பிக்கும் புகைப்படம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கை பற்றிய விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதேவேளை, ரியோ கிரான்டே பகுதியில், தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் காணப்படும் படத்தை, மனித தன்மையற்றது என வர்ணித்துள்ள குடியேற்றவாசிகளுக்கு சார்பாக குரல் கொடுக்கும் அமைப்பொன்று, அந்த படத்தை பயன்படுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் வெறுமனே தற்செயலாக இடம்பெற்ற துயரமில்லை, மாறாக அமெரிக்க எல்லையில் உருவாகியுள்ள நெருக்கடியின் விளைவு என்பதை வலியுறுத்துவதற்காக, இறப்பதற்கு முன்னர் தந்தையும் மகளும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட படத்தை பயன்படுத்தப் போவதாக, ரெயிசெஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
தந்தையும் மகளும் மகிழ்ச்சியுடன் காணப்படும் படத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, குடியேற்றவாசிகளாவதற்கு முன்னர், அவர்கள் ஒரு குடும்பமாக காணப்பட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
ஊடகங்கள் நீங்கள் இது மற்றுமொரு துயரச்சம்பவம் என மாத்திரம் கருத வேண்டும் என எதிர்பார்க்கின்றன எனவும், அவர்களை பொறுத்தவரை இது ஒரு புள்ளி விபரம் எனவும், ஆனால் நாங்கள் வேறு மாதிரி கருதுகின்றோம் எனவும், ரெயிசெஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின், குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கை காரணமாக, சிறந்த வாழ்க்கையை வாழ விரும்பும் மக்களின் உயிர்கள், நெருக்கடியான நிலையில் உள்ளன என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும், ரெயிசெஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. (சி)








