ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஜூன் 23ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அமைய, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.மயில்வாகனத்தின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் வித்தியாலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனியும், விழிப்புணர்வு வீதி நாடகமும் இன்று நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் திருமதி மாலதி.பேரின்பராஜா தலைமையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி மற்றும் விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வில், வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசகர் எ.ஜெகநாதன், பாடசாலைகள் இணைப்பாளர் திருமதி வை.இந்திரகுமரன், ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய இனைப்பாளர் எம்.சச்சிதானந்தன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். (rp)






