பரிஸில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ அல்லது மின்கசிவோ காரணமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து நேற்று(26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சட்டத்துறை அதிகாரிகள், ‘தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், அந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கக் கூடிய பல்வேறு சூழல்களை பட்டியலிட்டுள்ளனர்.

அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டு, மின்சாரக் கசிவு ஆகியவையும் அந்தப் பட்டியலில் அடங்கும். எனினும், குறித்த விபத்திற்கு சதி முயற்சிகள் காரணமாக இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளனர்.

பரிஸில் அமைந்துள்ள, புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென தீப்பிடித்தது.

இதன் காரணமாக, 12-ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது.

மேலும், இந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த புகழ்பெற்ற கூம்பு வடிவ கோபுரமும் இடிந்து விழுந்தது.

அத்துடன், தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.(சே)

Previous article225 பா.ம.உறுப்பினர்களும் தமது சொத்துகள் தொடர்பான விபரங்களை வெளியிடவேண்டும்
Next articleவைத்தியர் ஷாபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை- சி.ஐ.டி