வவுனியா நைனாமடுவில், நேற்று மாலை 5.30 மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை, பொலிஸார் வழி மறித்து, மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே தலைமையிலான பொலிஸார், நேற்று மாலை நெடுங்கேணி நைனாமடு வீதியில், புளியங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில், 7 பெறுமதி மிக்க முதிரை குற்றிகளை, கப் ரக வாகனத்தில் எடுத்துச் சென்ற போது, மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை பொலிசார் வழி மறித்த போது, வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாக செலுத்தியுள்ளார்.
வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார், சன்னாசி பரந்தன் பகுதியில் வழிமறித்த போது, இருவர் தப்பித்துச் சென்றதுடன், வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவரை, பொலிஸார் கைது செய்ததுடன், முதிரைக் குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளின் பின்னர், இன்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இதன் போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க, நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, புளியங்குளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (சி)





