அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க ஜனாதிபதியுடன் ஒப்பந்தத்துக்குச் செல்லவேண்டும்.அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் தனது வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை.
அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே இருப்பார்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோஷலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பலரும் பலரது பெயர்களைத் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் பொதுஜன பெரமுன கட்சி இதுவரை யாருடைய பெயரையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அத்துடன் இது தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பது எமது பக்கம் இருக்கும் குறையாகும். வேட்பாளரின் பெயரை அறிவித்தால்தான் தற்போது இருந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக் கும் கட்சிகளது தலைவர்களின் அடுத்த கூட்டத்தின்போது இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம்.
அதேபோன்று வேட்பாளராக தற்போது தெரிவிக்கப்படும் கோத்தபாய ராஜபக் ஷ, ஷமல் ராஜபக் ஷ ஆகியோருக்கு எமது கட்சியின் வேலைத்திட்டத்தை கையளித்திருக்கின்றோம். அதேபோன்று பசில் ராஜபக் ஷவிடமும் எதிர்வரும் தினங்களில் கையளிக்க இருக்கின்றோம்.