தற்போதைய சூழ்நிலையில், அரசியலமைப்பை இரத்துச் செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு சாத்தியமற்றது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று, கெட்டம்ப பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘இன்று நாட்டில் இருக்கும் நிலைமை தொடர்பில் அனைவருக்கும் தெரியும். பொருளாதாரம், அபிவிருத்தி என அனைத்திலும் நாம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறோம்.
நாம் கடந்த காலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தோம், அன்று குண்டுகள் வெடித்த போதுகூட மக்கள் அச்சப்படவில்லை.
பலமான அரசாங்கமொன்று இருந்தமையால் யுத்தத்தை வென்றுவிடலாம் என்று எம்மீது பூரண நம்பிக்கையில்தான் மக்கள் இருந்தார்கள்.
கெப்படிகொல்லாவையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போது, நான் உள்ளிட்ட அரச தலைவர்கள், முப்படையின் பிரதானிகள் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்தோம், அங்குள்ள மக்களுடன் உரையாடி, அவர்களின் அச்சத்தை போக்கினோம்.
இதனைத்தான் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செய்ய வேண்டும்.
யுத்தமொன்று இடம்பெற்றது என, நாம் மக்கள் மீது சுமைகளை சுமத்தவில்லை ஆனால், இன்றைய நிலைமை அவ்வாறு இல்லை.
பலவீனமான அரசாங்கமொன்றே நாட்டை ஆட்சி செய்து வருகிறது.
ஜனாதிபதியும் பிரதமரும் இருவேறு திசைகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால்தான் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைக் கூட கூறிக்கொள்ள முடியாத நிலையில்தான் அரசாங்கம் இருக்கிறது. மாணவர்களுக்கு பாடசாலைக்குச் செல்லக்கூட அச்சமான ஒரு நிலைமைதான் தொடர்ந்தும் நிலவி வருகிறது.
இந்த நிலைமை முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.
தேர்தலை தவிர்த்து இதனை போக்க வேறு வழிகளே இல்லை என்பதுதான் எமது நிலைப்பாடாகும், சரத் பொன்சேகா கூட, தீவிரவாத அச்சுறுத்தல் இன்னும் முற்றாக ஒழியவில்லை என்றுக் கூறியுள்ளார்.
இப்படியே நாட்டை கொண்டுசெல்ல முடியாது.
இதனால்தான் தேர்தல் ஒன்று தேவை என்று நாம் கூறி வருகிறோம், பாதுகாப்புக் கொள்கை பலப்படுத்தப்பட்டால் மாத்திரமே ஒரு நாட்டினால் ஸ்திரமான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் விளைவுகளினால் அத் திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி காலம் கடந்து உணர்ந்துள்ளார்.
தற்போது உணர்வதால் எவ்வித பயனும் ஏற்படாது, இந்த வருடத்தில் தேர்தலுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு போதுமான காலம் தற்போது கிடையாது.
ஒருவேளை இரத்துச் செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற வேண்டும் தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தில் எத்தரப்பினரிடமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடையாது
ஆகவே அரசியலமைப்பை இரத்துச் செய்ய வேண்டும் என்பது சாத்தியமற்றது.
நிலையான ஒரு அரசாங்கத்திலே, அரசியலமைப்பில் காணப்படுகின்ற குறைபாடுகளும், முரண்பாடான ஏற்பாடுகளும், பாராளுமன்ற பொருள்கோடலுக்கு அமைய திருத்தியமைக்கப்படும்.
என குறிப்பிட்டுள்ளார்.(சி)









