துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தாலும், பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஒட்டத்தை மாத்திரம் பெற்று 20 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் வின்ஸ் 14 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ டக்கவுட் முறையிலும், ஜோ ரூட் 57 ஓட்டத்துடனும் இயன் மோர்கன் 21 ஓட்டத்துடனும், பட்லர் 10 ஓட்டத்துடனும், மொய்ன் அலி 16 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ஓட்டத்துடனும், அடில் ரஷித் ஒரு ஓட்டத்துடனும், ஜோப்ர ஆச்சர் 3 ஓட்டத்துடனும், மார்க்வூட் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன், இங்கிலாந்தின் வெற்றிக்காக இறுதிவரை அதிரடியாக போராடிய பென் ஸ்டோக்ஸ் மொத்தமாக 89 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 82 ஓட்டத்துடன் ஆடடமிழக்காதிருந்தார்.

இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியிருந்தாலும் பந்து வீச்சினால் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்தனர். குறிப்பாக லசித் மலிங்க 10 ஓவருக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 43 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுக்களையும், இசுறு உதான 8 ஓவருக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 41 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 8 ஓவருக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 32 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப் 10 ஓவருக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 38 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய மலிங்க தேர்வானார்.(சே)







