
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தமிழ் பிரதேசங்களிலும் இன்று(20) ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம் கல்முனையில் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று பூரண ஹர்த்தால் கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை காலை தொடக்கம் கல்முனை சுபத்ரா ராமயா விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர், கல்முனை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தன் குருக்கள், கிறிஸ்தவ போதகர் அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரெத்தினம் ஆகியோர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் வலுவடைந்துள்ள இப்போராட்டத்தில் நேற்றைய தினம் திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதற்கு ஆதரவாக காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேசங்களிலும் அடையாள உண்ணாவிரதப்போராட்டங்கள் தற்போது இடம்பெறுகின்றது.
இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தமிழ் பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன் அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது சேவையினை இடைநிறுத்தியுள்ளது.
மேலும் குறித்த பிரதேசங்களில் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொழிலுக்காக செல்ல காத்திருந்த தொழிலாளர்களும் தமது இருப்பிடங்களை நோக்கி பயணித்ததை காண முடிந்தது.
இந்நிலையில் அரச திணைக்களங்கள் பகுதியளவில் செயற்பட்டாலும் பொதுமக்களின் வருகையின்மை காரணமாக செயற்பாடுகள் யாவும் முடங்கியுள்ளது.
பாடசாலைகள் நடைபெறுகின்றபோதிலும் மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. (நி)








