நுவரெலியா ஹட்டன் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டப் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தினை பூர்த்தி செய்ய முடியாது அப்பகுதி மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூன்று லட்சம் ரூபா கடன் அடிப்படையில் அக்கரப்பத்தனை பகுதியில் உருவாக்கப்பட்ட 25 வீடுகள் கொண்ட வீடமைப்புத்திட்டத்தினை பூர்த்தி செய்ய முடியாது அம்மக்கள் திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தோட்டத்தில் தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்த மக்களின் வேண்டுகோளுக்கமைய முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஷ்ணனின் ஏற்பாட்டில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கடன் அடிப்படையில், 25 வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் பகுதி பகுதியாக உரிமையாளர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்பு திட்டத்தில் அத்திபாரம் அமைப்பதற்காக சுமார் 30 ஆயிரம் ரூபாவும், மூன்று வரி சீமந்து கல் கட்டியபின் 60 ஆயிரம் ரூபாவும், நிலைக்கு மேல் கொங்கிரீட் இட்ட பின் மேலும் 90 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே குறித்த மக்கள் வீடுகளை நிர்மாணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீடுகளை உரிய நேரத்தில் உரிய அளவு பூர்த்தி செய்ய முடியாது போயுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், இதனால் பலருக்கு நிதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமது வீடுகளின் எஞ்சிய பகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(சி)








