முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்த, இரு மத பெயர்ப்பலகைகளும், இன்று அகற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில், சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைத்து, குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு, வழிபாடுகள் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால், இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கு இடையில், வாழிபாடு மற்றும் இடம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றில் தொடர்ந்து வந்துள்ள நிலையில், இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பௌத்த துறவிகள், மக்கள் ஒன்றிணைந்து, கடந்த 5 ஆம் திகதி, ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், கடந்த 11 ஆம் திகதி, அமைச்சர் மனோ கணேசன், செம்மலை நீராவியடி பிள்ளையார் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்தார்.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில், குருகந்த ரஜமகா விகாரை என பௌத்த துறவியாலும், நீராவியடிப் பிள்ளையார் என கிராம மக்களாலும் பெயர்ப்பலகைகள் சூட்டப்பட்டுள்ளது.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட இரண்டு பெயர்ப் பலகைகளில், ஒரு பெயர்ப் பலகை அனுமதி பெறப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக, ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக, ஒரு பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை.

பெயர்ப் பலகையை வீதியின் அருகில் நாட்டுவதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி தேவை என்ற நிலையில், இன்று சம்பவ இடத்திற்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த ரஜமகா விகாரையின் பெயர் பலகையையும், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் பெயர்ப்பலகை ஒன்றையும் அகற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பொலிசார் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் முன்னிலையில், வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்திற்குள், இரண்டு பெயர்ப்பலகைகளும் காணப்பட்டமையால், அவை அகற்றப்பட்டுள்ளது.

 

Previous articleஅஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரிடம் விசாரணை!
Next articleபக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம்