ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டு வரும் அமைச்சரவைக் கூட்டம், அடுத்த வாரம் நடைபெறும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நடத்துவதாயின் அதற்கொரு முறை இருக்கிறது.
இதில் ஊடகங்களுக்கான காட்சிகளே இடம்பெறுகின்றன.
இந்தத் தெரிவுக்குழுவில் உள்ள உறுப்பினர்களைப் பாருங்கள்.
அதில் உள்ள சிலர் சில குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்கள்.
குற்றச்சாட்டுக்களினால் குற்றவாளிகளாக அடையாளங்கண்டவர்கள், மக்களின் வாக்குகளின்றி தெரிவானவர்கள். அதில் சிலர் குற்றவாளிகளாக வேண்டியவர்கள் இன்று விசாரணையாளர்களாக இருக்கின்றனர்.
அதனால் இந்த ஊடகக் கண்காட்சியை எதிர்க்கின்றோம்.
தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுகின்ற புலனாய்வுத் தகவல்களை அங்கே பகிரங்கப்படுத்துவதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலரும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மிலேனியம் சிற்றியில் இடம்பெற்ற காட்டிக்கொடுப்பு போன்றே இன்று இடம்பெறுகிறது.
விசாரணைக்கு சம்பந்தப்படுத்தும் புலனாய்வு அதிகாரிகள் பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரானவர்கள் என்பதால், இப்போது அவர்களுடைய உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம்.
தெரிவுக்குழுவுக்கு நாங்கள் கையெழுத்தும் இடவில்லை.
நீதியான முறையில் ஐக்கிய தேசிய முன்னணி இதனை செய்யும் என்று எதிர்பார்த்தாலும் அது இடம்பெறவில்லை.
இந்த நிலையில் தெரிவுக்குழு காரணமாக அமைச்சரவைப் பிரச்சினைக்கு அடுத்த வாரம் முடிவு வரும் என நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். (சி)






