இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் யுத்த சூழ்நிலையில் காணாமல்போனவர்கள் சம்மந்தமான விடயங்களை கையாளுவதற்கான தீர்மானம் ஒன்றை முதன்முறையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது.

இந்த பிரேரணை மீதான விவாதத்தில் கருத்துக்களை முன்வைத்தபோதே இலங்கையில் காணாமல்போயுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பாக விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக பல தசாப்தகாலமாக விடைதெரியாதிருப்பதாகவும் இவ்வாறான நிலைமை குறித்து வினைத்திறனான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

யுத்தத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பும், காணாமல்போகின்றவர்களை முறையாக தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் தொடர்பான சரியான விபரங்களை வேறுபாடுகள் இன்றி வைத்திருக்கவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

மனிதர்கள் காணாமல்போவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், குறிப்பாக சிறார்கள் காணாமல்போகின்ற நிலைமை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு அமைய இலங்கை குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.(ந)

Previous articleரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்-சட்டமா அதிபருக்கு கட்டளை
Next article‘வாயு’ புயல்-3 இலட்சம் மக்கள் குஜராத்தில் இடம்பெயர்வு !