ஏழைகளுக்காக தன்னை தியாகம் செய்யும் மனப்பக்குவமுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச போல் அனைத்து அமைச்சர்களும் இருப்பார்களாயின் இந்த நாடு எப்போதோ செழிப்புற்றிருக்கும் என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கமைய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உருவாக்கப்படவுள்ள கருங்கொடி எழுச்சி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. மிகவும் சக்தி வாய்ந்தஇ திறன் வாய்ந்த அமைச்சர் ஒருவர் இந்த நாட்டிற்கு கிடைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இனங்களுக்கிடையே மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய ஒருவராகவும் அவர் திகழ்கின்றார். ஏழைகளுக்காகவும் மிகவும் வறுமையில் வாடும் மக்களுக்காகவும் தன்னை தியாகம் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியும் வருகின்றார். வீடற்றவர்கள் அனைவருக்கும் வீடொன்றை பெற்றுக்கொடுக்கும் மகத்தான பணியையும் அவர் முன்னெடுத்து வருகின்றார்.
இவ்வாறான ஒரு அமைச்சரின் கரங்களை பலப்படுத்த வேண்டியது நமது அனைவரது கடமை என்பதுடன் எதிர்காலத்தில் அவருக்கான முழு ஒத்துழைப்பும் எம்மால் வழங்கப்படும் என்றார்.
இதேநேரம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஆலையடிவேம்பு அலிக்கம்பை கிராமத்தில் மாத்திரம் 200 வீடுகளுக்கான அனுமதியும் பிரதேசத்தில் மொத்தமாக 300 வீடுகளும் அமைக்க அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் எங்கும் நடைபெறாத அபிவிருத்தியாக இதனை கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு தற்போது உள்ள நிலையில் ஒரு இனத்தை அல்லது சமூகத்தை யாரும் குறை கூறுவதை தவிர்த்து அனைத்து மக்களும் இலங்கையர் என்ற எண்ணத்துடன் பயணித்து நாட்டை வளம்பெற செய்ய வேண்டும் எனும் கோரிக்கையினையும் இங்கு முன்வைத்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.காளிதாசனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அம்பாறை மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் கலன்சூரிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேன் இணைப்பாளர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.
இதன் பின்னர் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.பின்னர் மக்கள் தற்போது வாழ்ந்துவரும் குடியிருப்புக்களையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இலங்கை வீடமைப்பு அதிகார சபையின் மானிய அடிப்படையிலான உதவியுடன் 42 வீடுகள் குறித்த பிரதேசத்தை சேர்ந்த பகுதிகளில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.