மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  தளவாய் சேனவட்டை பிரதேசத்தில் காட்டுயானைகளினால் மூன்று தென்னந்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இன்றுஅதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்னந் தோட்டங்களுக்குள் உட்புகுந்த யானைகள் சுமார் இருநூறு தென்னங்கன்றுகளை துவம்சம் செய்துள்ளன.

பற்குணசிங்கம் ஜெயகாந்தன், சறவணபவான் ராஜேஸ்வரன் மற்றும் யோகராசா லுவானந்தராஜா ஆகியோரது தென்னந்தோட்டங்களே காட்டு யானைகளினால் அழிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

காட்டு யானைகள் இங்கு நடப்பட்டிருந்த இளந்தென்னங்கன்றுகளை குருத்துப்பகுதினால் முறித்து தின்றுள்ளன.

இதனால் தென்னங்கன்றுகள் மீண்டும் வளரமுடியாமல் இறப்பதாக தோட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட தமது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட தென்னம்பயிர்ச்செய்கையை காட்டுயானைகள் அழித்துள்ளதனால் தமக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(ம)

 

 

Previous articleகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்
Next articleஏறாவூரில் இலவச வைத்திய சேவை!