அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையில், ஞானசார தேரர் தலையிட்டமை, தமிழ் மக்களுக்கும் பிரச்சினை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
கல்முனைப் பிரச்சனைப் பொறுத்தவரையில் இந்த அரசின் காலத்தில் அதாவது இப்ப வந்த பிரச்சனை அல்ல. இது மிக நிண்டகாலமாக குறிப்பாக பிரேமதாசா காலம் தொட்டு இருந்த வருகின்ற பிரச்சனை தான். ஆயினும் இதை எதிர்த்து நிற்கக் கூடிய முஸ்லீம் சமூகத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் நேரடியாக வரப்போவதில்லை. அவ்வாறானன பாதிப்புக்கள் அவர்களுக்கு எதுவுமே கிடையாது.
இருந்தாலும் அந்தப் பகுதிகளிலே ஒரு தமிழ்ப் பிரதேச செயலகமொன்று உருவாக்கப்பட்டு செயல்ப்படுவதன் மூலம் அங்கு தங்களுடைய இருப்பை பரவலாக்கி கொள்வதற்கு அல்லது ஆக்கிரமித்துக் கொள்வதற்கு தடைகள் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் அவர்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தான் நான் கருதுகின்றேன்.
உண்மையிலையே சிறுபான்மையாகிய முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். வெறுமனே நாங்கள் மாத்திரம் அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது. உதாரணத்திற்கு பார்த்தீர்களானால் கிழக்கில் முதலமைச்சராக ஒரு முஸ்லீம் காங்கிரஸ் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம்.
கிழக்கு மாகாண சபையில் எங்களிடம் 11 அங்கத்தவர்கள் இருந்த நிலையில் அவர்களிடம் 7 அங்கத்தவர்கள் இருந்த போதிலும் கூட நாங்கள் அந்த நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக கிழக்கு மாகாணத்தையே விட்டுக் கொடுத்தோம். ஆனால் இந்த ஒரு சிறிய பிரதேச செயலகப் பகுதியை அதாவது கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகப் பகுதியை விடுவிதற்கு அல்லது உருவாக்குவதற்கு அவர்கள் எவ்வளவோ தடைகளை ஏற்படுத்துகின்றார்கள்.
இதுவொரு நல்ல விசயம் அல்ல. அவர்கள் தரக் கூடிய தடைகள் என்பது இன்றைக்கு பாரதூரமான நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கின்றது. இன்று பௌத்த துறவிகள் ஞானசார தேரர் போன்றவர்கள் (அதிலும் ஞானசார தேரர் அவர் பௌத்த துறவியோ தெரியவில்லை) இன்று அதிலே தலை வைத்து இதை ஒரு பூதாகாரமான பிரச்சனையாக ஆக்குவதற்கான அடித்தளங்கள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இது உண்மையில் ஒட்டுமொத்தமாக முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல. ஆகவே இதைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைத்து எவ்வளவு விரைவாக இதனைத் தீர்க்க முடியுமோ அந்தளவிற்கு விரைவாகத் தீர்க்க வேண்டுமென்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் போராட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஆகவே கல்முனை விவகாரம் மட்டுமல்லாது பல விடயங்கள் தொடர்பிலும் இந்த அரசினாலும் கடந்த அரசாங்கங்களினாலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் என்னுடைய அறிவிற்கு அந்த வாக்குறுதிகளை முழுமையாக இவர்கள் நிறைவேற்றியதாக காணவில்லை. ஆனாலும் கல்முனை விடயத்தில் தற்போது வாக்குறுதி வழங்கப்பட்டள்ளது. அதே நேரம் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் எவ்வளவுதூரம் இதனை இழுத்தடிக்க முடியோ அவ்வளவு தூரம் அரசாங்கம்இழுத்தடித்து வருகிறது. ஆகவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் இது நடைபெறுமா இல்லையா என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும். அவ்வாறு நடைபெறாது விட்டால் ஒரு மிகப் பெரிய தேவையற்ற பிரச்சனை உருவாகுவதற்கு துணையாக நிற்கப்போகின்றார்கள் என்று தான் நினைக்கின்றேன் என்றார்.
ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை எடுக்குமென அக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
ஐனாதிபதித் தேர்தல் என்று வருகின்ற போது அதில் போட்டியிடும் வேட்பாளர் மிக முக்கியம். அந்த வேட்பாளரின் தன்மை, அவர் சொன்ன விடயத்தைச் செய்யக் கூடியவராக இருப்பாரா. பலமானவராக இருப்பாரா, உண்மையான விசுவாசத்துடன் எங்களுடன் பேசுகின்றாரா, என்பதெல்லாம் பார்க்க வேண்டும். ஆகவே அத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அறிவிககப்படும்; வரையும் நாங்கள் யாரை ஆதரிப்போம் அல்லது என்ன நிலைப்பாட்டை எடுப்போம் என்று சொல்ல முடியாது.
ஒரு வேட்பாளரை அறிவித்த பின்பு அவருடன் நாங்கள் நடாத்தக்கூடிய பேச்சுவார்த்தைகள் அல்லது அவருடன் பேசி எடுக்கக்கூடிய முடிவுகள் தொடர்பிலும் பார்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறாக ஒருவருடன் எழுத்து மூலத்திலேனும் ஒப்பந்தகங்களைச் செய்தாலும் அந்த ஒப்பந்கனை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் பல ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதில் பண்டா-செல்வாஒப்பந்தம், டட்லி- செல்வாஒப்பந்தங்களை நாம் பார்த்திருக்கின்றோம். அவைகள் எல்லாம் கிழித்தெறியப்பட்டதைம் பார்த்திருக்கிறோம். இருந்தாலும் சரி பிழை என்பதற்கப்பால் இதில் எது சரிவரும் எது சரிவராது என்பதற்கப்பால் நிச்சயமாக பெரும்பான்மைக் கட்சியொன்றுடன் அல்லது ஆட்சிக்கு வருகின்ற கட்சியொன்றுடன் பேசித் தான் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.
ஏனென்றால் கடந்த 70 வருடமாக பேராடியும் அடைய முடியாத நிலைமை உள்ளது. இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஒரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்தும் நாங்கள் எங்களுடைய முயற்சியை எடுக்க வேண்டும். சர்வதேச ரீதியாக எங்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சென்று அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முழு முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இவைகள் மூலம் தான் ஒரு நியாயமான தீர்வை அடைய முடியும்.
அதற்காக சரியான ஒருவர் என்று கருதக்கூடியவர் யார் என்பதைப் பார்த்து அவருடன் நடாத்தக் கூடிய சம்பாசனைகள் அல்லது அவர் எங்களுக்குத் தருகின்ற உறுதிமொழிகள் என இவை iஎல்லாவற்றையும் வைத்து தான் எங்களுடைய செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க முடியும் என்றார்.
தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறினாரா? என கேள்வி எழுப்பியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக தனக்கு தெரியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவும் கூறியிருக்கின்றார்.
சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கின்றார். தமிழ் சமூகத்தில் மாமா என்ற உறவுக்கு ஒரு அந்தஸ்த்து இருக்கின்றது. மரியாதை இருக்கின்றது. அதைசுட்டித்தான் கூறினாரா? அல்லது வேறு அர்த்தத்தில் கூறினாரா? என்பது தொடா்பாக எனக்கு தெரியவில்லை.
உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே சரியாக என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களை பொறுத்தளவில் நாங்கள் மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசாங்கத்துடன் பேசுகிறோம். ஒரு அரசியல் தரப்பாக, மக்களுடைய ஆணையை பெற்ற தரப்பாக எங்களுக்கு அந்த பொறுப்பும் கடமையும் இருக்கின்றது.
அந்தவகையில் நாங்கள் பேசுகிறோம், பேசிக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு பேசாமல் இருக்க முடியாது. அந்த பேச்சுக்களில் அரசு கூறும் விடயங்களை நாங்கள் மக்களுக்கு கூறுகிறோம். அது நடக்காதவிடத்து அதற்கான ஒட்டுமொத்த பொறுப்பும் எங்களுடைய தலையில் சுமத்தப்படாது;. இதனை எந்த அரசியல் தரப்பும், மக்கள் ஆணையை பெற்ற எந்த தரப்பும் செய்யும், செய்யவேண்டும்.
எந்த அரசியல் கட்சிகளும் மக்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற போது மக்கiளுடைய பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டியது அதற்காக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது போராட்டங்களை நடாத்த வேண்டியது அந்தக் கட்சிகளினுடைய கடமை. அதனையேநாங்கள் செய்கின்றோம். ஆகவே அதற்கு மேல் மாமா வேலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை இன்றைய நிலையில் காணவில்லை. ஏனெனில் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய கட்சிகள் மத்தியில் கூட ஒற்றுமையைக் காணவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில் மாற்று அணி என்பது எப்படி சாத்தியம் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமா தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது கூட்டமைப்பிலிருந்து புளொட் அமைப்பு வெளியேறி மாற்று அணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இதுவரைகாலமும் நாங்கள் பங்குபற்றினோம் என்பதை பகிரங்கமாக சொல்லலாம். அவ்வாறு பங்குபற்ற வேண்டியது எங்களுடைய கடமை. அந்தக் கடமையிலிருந்து விடுபட முடியாது. இந்த பேச்சுவார்த்தைகள், அரசமைப்பு நடவடிக்கைகள் முழுவதும் வெளிநாட்டு அழுத்தங்களால் நடைபெறும் விடயங்கள் தான்.
ஆகவே நாங்களாகவே அதை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் மீண்டும் சர்வதேசத்திடம் இதனைச் சொல்ல முடியாது. அரசாங்கம் பிழை விடுகின்ற போது அதை நாங்கள் எடுத்துக் கூறக்கூடிய விதத்தில் அரசாங்கம் தாங்களாகவே இந்த நடவடிக்கைகளை நிறுத்தினால் இதனை சொல்வதற்கு எங்களுக்கும் இலகுவாக இருக்கும்.
அதே போல கூட்டமைப்பு தவறுவிடுகிற போது ஒரு மாற்று அமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளைக் காணவில்லை. ஏனென்றால் இன்று கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக்கூடிய கட்சிகள் மத்தியில் கூட ஒரு ஒற்றுமையை நான் காணவில்லை. அவர்களில் ஒருவரை ஒருவர் பேசுவதும். ஒருவரை மற்றவர் றோ என்றும் அதற்காக வேலை செய்கிறார் என்பதும் நான் அப்படியில்லை. இவர்தான் சீனாவிற்காக வேலை செய்கிறார் என்பதுமாக நிலைமை இருக்கிறது. இப்படியான நிலைப்பாடு இருக்கிற பொது சரியான மாற்றுக்கூட்டு ஒன்று எப்படி சாத்தியம்.
சரியான ஐனநாயகமான சூழ்நிலை தமிழ் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். இப்போதைய நிலையில் அதற்காக ஒரு மாற்றை என்னால் பார்க்க முடியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பிற்குள் பிழை இல்லாமல் இல்லை. கூட்டமைப்பை பொறுத்தமட்டில் பல பிழைகள் இருக்கின்றன. ஆனாலும் இருப்பதை உடைத்துக் கொண்டு போகிற போது சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அப்படியான சரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய வகையில் ஒரு மாற்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தான் இப்போதைக்கூ நான் கூறக்கூடிய விடயம் என்றார்.(சி)