நாடு முழுவதும் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிலற்ற பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்ளுதல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான தீர்மானம் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில், தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீளக்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில், பிரதமரால் அமைச்சரவை அறிந்து கொள்வதற்காக இந்த விடயம் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் உள்ளக மாணவர்கள் என்ற ரீதியில் பட்டங்களைப் பெற்றுள்ள தொழிலின்றி இருக்கும் 5000 பட்டதாரிகளையும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 15 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொண்டு பயிற்சி அளிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முதல் கட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட எண்ணிக்கையில் 1800 வெற்றிடங்களுக்கும், 2ஆம் கட்டத்தின் கீழ் 15 000 பேர் என்ற ரீதியிலும் இன்னும் வெற்றிடங்கள் நிலவுகின்றன எனவும், இதற்கமைவாக 16 800 வெற்றிடங்களுக்கு, 2012ஆம் ஆண்டு பட்டம்பெற்ற பட்டதாரிகளை நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக 2013 தொடக்கம் 2016ஆம் ஆண்டு வருடங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்ற ரீதியில் பயிற்சியாளர்களாக துரிதமாக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (சி)