ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, எந்தக் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் முழுமையான வெற்றியை பெற முடியாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீனமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஒருவரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் பௌத்த மக்களின் வாக்குகள் ஏனைய பிரிவினருடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளன.
அதேபோல இந்த நாட்டு கட்சிகளில் மிகவும் பழைமை வாய்ந்த கட்சியான கம்மியூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து இடதுசாரி கட்சிகளினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்புடனும் கூடிய ஒரு வேட்பாளரையே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவு செய்ய வேண்டும்.
சாதாரணமாக உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி கொண்ட போதிலும், ஜனாதிபதித் தேர்தல் என்பது அதனுடன் ஒப்பீடு செய்து வெற்றி இலக்கை திட்டமிட முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன முன்னணி 50 சத வீத வாக்குகளைப் பெற்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்பு இன்றி ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் முடியாது.
அதேபோல முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, தற்போது கட்சி உறுப்புரிமை அற்றவராக இருந்த போதிலும், ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட சட்டத்தில் அவருக்கு இடமில்லை என்பதால், அவர் ஒரு கட்சியை தெரிவு செய்ய வேண்டும்.
அதேபோல கூட்டணி அமைக்கவுள்ள கட்சிகள், நாளையதினம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதில் இடம்பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்’
என குறிப்பிட்டுள்ளார். (சி)