விவசாய துறை தொழில் முயற்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் என்டர்பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ரன்அஸ்வென்ன கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இதுவாகும்.
இக்கடன் திட்டம் 3 பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
முதலாவது பிரிவின்;கீழ் சிறிய அளவில் விவசாய முயற்சியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய அமைப்புகள், அலங்கார மலர் உற்பத்தியாளர்கள் மற்றும் அலங்கார மீன் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினர் தமது தொழில் துறையை மேம்படுத்துவதற்கான வகையில் 5 மில்லியன் ரூபா கடன் வழங்கப்படுகின்றது.
இரண்டாவது பிரிவின் கீழ் விவசாயம், மீன் பொதியிடல் மற்றும் நவீன வசதிகளுடனான வள்ளங்களை பெற்றுக்கொள்வதற்காக 300 மில்லியன் ரூபா வரையில் கடன் வழங்கப்படுகிறது.
அத்துடன் வணிக கைத்தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்காக 750 மில்லியன் ரூபா வரையில் பாரிய கடன் வசதிகள் வழங்குவதே மூன்றாவது பிரிவின் கீழ் இடம்பெறுகின்றது.
அனைத்து பயனாளிகளுக்கும் ஒரு வருட நிவாரண காலம் அடங்கலாக ஏழு வருட காலத்தில் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, இலங்கை சேமிப்பு வங்கி, இலங்கா புத்திர அபிவிருத்தி வங்கி, ஹற்றன் நெசனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, டி.எவ்.சி.சி.வங்கி, பான்ஏசியா வங்கி, அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி, கார்கில்ஸ் வங்கி, வீடு அபிவிருத்தி நிதி கூட்டத்தபனம், யூனியன் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அமானா வங்கி ஆகியவற்றின் ஊடாக இந்த கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.(நி)









