வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள், இன்று இளைஞர் குழுவொன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலையத்திற்கு முன்பான, பட்டா ரக வாகனத்தில் நபர் ஒருவர் பழங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து, வர்த்தக நிலைய உரிமையாளர், பழங்களை விற்பனை செய்யும் நபரிடம் சென்று, இந்த விடத்தில் வாகனத்தில் வியாபாரம் மேற்கொள்வதினால், தமக்கு வியாபாரம் மேற்கொள்ள இடையூறாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பல நாட்கள் தெரிவித்தும், பட்டா ரக வாகனத்தில் பழங்கள் வியாபாரம் மேற்கொள்ளும் நபர், வர்த்தக நிலைய உரிமையாளரின் கருத்தை செவிமடுக்காது, அவ்விடத்திலேயே வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று கலை இரு தரப்பினருக்கு இடையேயும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து, பட்டா ரக வாகனத்தில் வியாபாரம் மேற்கொண்ட நபர், இளைஞர் குழுவை வரவழைத்து தாக்குதல் நடத்தியதாகவும், காயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்களும் தெரிவித்தனர்.
இதன் போது, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், பட்டா ரக வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். (சி)





