வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள், தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரி, வவுனியா பிரதேச செயலாளருக்கு, மகயர் கையளித்தனர்.
கிராமத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்லும் 10 கிலோ மீற்றர் நீளமான வீதி, நீண்ட காலமாக புணரமைக்கப்படாத நிலையில், குன்றும் குழியுமாக காட்சியிளிக்கின்றது.
தற்போது மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையால், அந்த வீதியை பயன்படுத்தும் கிராம மக்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே தமது பயணத்தை தொடர்கின்றனர்.
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் முதல் வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள் வரை, அனைவரும் சொல்லொணாத் துன்பங்களுடனேயே தமது பயணத்தை தொடர்கின்றனர்.
இதேவேளை, கிராமத்துக்கு பேருந்துச் சேவையும், நீண்ட காலமாக இல்லாத நிலமை காணப்படுகின்றது.
கூலித்தொழிலை நம்பி வாழ்க்கை நடாத்தும் தாம், நகருக்கு செல்ல வேண்டுமானால், ஆயிரம் ரூபா முதல் ஆயிரத்து 500 ரூபா வரையான பணத்தை, முச்சக்கரவண்டிக்கு வழங்கியே சென்றுவருவதாகவும், தமது நிலமையை உணர்ந்து, உரிய அதிகாரிகள் வீதியை சீரமைப்பதுடன், பேருந்துச் சேவையையும் ஏற்ப்படுத்தி தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் கோரிக்கையை பரிசீலித்த உதவிப் பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, எதிர்வரும் வருடம் வகுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில், குறித்த கிராமத்தின் வீதியை திருத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், பேருந்துச் சேவை தொடர்பாக, தொடர்புடைய திணைக்களத்துடன் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.
வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதி மக்களின் கோரிக்கை!
