யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை பாலத்துக்கு அருகில் டிப்பர் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கடல் நீர் ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1:25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய டிப்பர் வாகனத்தின் சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சிப் பகுதியில் மண் பறித்துவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போது, இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்டவேளை, குறித்த டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடல் நீர் ஏரிக்குள் வீழ்ந்ததாக தெரிவித்த அச்சுவேலி பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். (நி)